பணம் காய்க்கும் குளங்கள்.

காட்டம்பட்டி: ஆற்று மணலை கொள்ளையடித்து விழுங்கிய பணமுதலைகள், அரசு மற்றும் நீதிமன்றங்களின் பல்வேறு கெடுபிடிகளால் தற்போது குளங்களை குறிவைத்திருப்பது பலரும் அறிந்ததே. தற்போது அன்னூர் ஒன்றியம் காட்டம்பட்டி குளம் இவர்களுக்கு இலக்காகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மழைநீர் சேகரித்து குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கவும், சுற்றுச்சூழல் காக்கவும் பல்வேறு அமைப்புகளின் முயற்சியால் சென்ற ஆண்டு பெரியகுளங்களை தூர்வாரி செப்பனிட பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டது. இதையும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, பொது சேவை என்ற பெயரில் சில சுரண்டல் திமிங்கலங்கள் குளத்து மண்ணை விற்று காசாக்க முயன்றதும், அச்செய்தி ஊடகங்கள் மூலம் வெளியில் தெரிந்து பரபரப்பு ஏற்பட்டதும் ஊர் அறிந்த உண்மை..

தற்போது இந்த பெரிய சுரண்டல்களை முன்மாதிரியாக கொண்டு இதுபோன்ற பல முயற்சிகள் நடைபெற துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அன்னூர் அருகில் உள்ள கட்டம்பட்டி கிராமத்திலும் குளத்தை கொள்ளையடிக்கும் பணி  நடைபெறுகிறது.

இந்த ஊரில் அமைந்துள்ள குளம் அரசு ஆவணங்களின் படி காட்டம்பட்டி பஞ்சாயாத்துக்குட்பட்டு 87 ஏக்கரும், குன்னத்தூர் பஞ்சாயத்துக்குட்பட்டு 40 ஏக்கரும் ஆக மொத்தம் சுமார் 127 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள முதியோரிடம் பேசியதில் இந்த குளம் பல வருடங்களுக்கு முன்பு 60 வல்லம் (240 ஏக்கர்) இருந்ததாகவும் பிறகு ஆக்கிரமிப்பில் 127 ஏக்கராக சுருங்கியதாகவும் தெரிகிறது. தமிழக பொதுப்பணித்துறையின் நிர்வாகத்தில் உள்ள இதிலும் சுமார் மூன்றில் ஒரு பகுதியை தவிர மற்ற பகுதிகள் சீமை கருவேலமரங்கள் வளர்ந்து புதர்கள் மண்டியுள்ளது.

tank, panorama, kattampatti, struggle, conservation, flora, fauna, wetland

இப்பகுதி மக்களின் நீர் ஆதாரமாகவும், விவசாய கிணறுகளின் ஊற்றாகவும், கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் இருந்த இக்குளத்தில் நெடுங்காலமாக தூர்வாரப்படாமல், கடந்த 25 வருடங்களாக வண்டல் மண் எடுக்க இப்பகுதி விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக தங்கள் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இங்குள்ள விவசாயிகள் அதிக விலைகொடுத்து வெளியூர்களிலிருந்து வண்டல் மண் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்.

இந்நிலையில் சென்ற வாரம் திடீரென இக்குளத்திற்குள் குடிசை ஒன்று அமைக்கப்பட்டு ராட்சத இயந்திரங்களை கொண்டு மண் வாரும் பணி ஆரம்பிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு சுமார் 400 டிப்பர் அளவிற்கு மண் எடுக்கப்பட்டது. அதிர்ந்து போன உள்ளூர் மக்கள் விசாரித்ததில் இது பொதுப்பணித்துறையின் மூலம் டெண்டர் விடப்பட்டு சுமார் ஒரு மீட்டர் ஆழம் மட்டும் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ‘அவினாசி அத்திக்கடவு’ திட்டத்திற்காக இக்குளம் ஆழப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆளுங்கட்சி ஆதரவாளரான ஒருவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்ததாரர் ஒரு டிப்பர் லோடு மண்ணிற்கு ரூபாய் 300 மட்டும் பொதுப்பணித்துறைக்கு செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Kattampatti Tank - Hut

மேலும் தூர்வாரி குளத்தின் கரைகளை பலப்படுத்தவேண்டிய மண்ணில் ஒரு துளிகூட அந்த பணிக்காக பயன்படுத்தப்படவில்லை. அவை அனைத்தும் ஒரு லோடு சுமார் ரூபாய் 2500 வீதம் வெளிச்சந்தையில் விற்பதாகவும் கூறப்படுகிறது.

 Kattampatti Tank - Dug Part

 நெடுங்காலமாக உள்ளூர் மக்கள் விவசாய பணிக்கு மண் வழங்க மறுத்து வந்த நிலையில் வெளியூர் ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கியதில் அதிருப்தி அடைந்த காட்டம்பட்டி, குன்னத்தூர், குப்பேபாளையம், பிள்ளையப்பம்பாளையம், மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள், வணிக நோக்கத்தில் மண் எடுக்க அனுமதிப்பதை தடுக்க ‘குளம் குட்டைகள் பாதுகாப்பு  இயக்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி போராடிவருகிறார்கள்.

இவர்கள் குளத்தில் மண் எடுப்பதை தடுக்க முனைந்ததை அறிந்து ஒப்பந்ததாரரின் ஆதரவாளர்கள் சிலர், இந்த ஒப்பந்தத்தை அமைச்சர் ஒருவரின் உறவினர்களே இந்த அனுமதியை பெற்றுள்ளதாகவும், இதற்காக உள்ளூர் முக்கியஸ்தர்கள் சிலருக்கும் ‘கமிஷன்’ தொகை வழங்கப்படுவதாகவும், எனவே இதை தடுத்தால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்றும் மிரட்டியுள்ளனர்.

Heavy Vehicles 02

மூன்று நாட்கள் மட்டுமே மண் எடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இக்குளத்தில் விதிகளை மீறி மண் அள்ளப்படுவது பட்டவர்த்தனமாக தெரிகிறது. ஒரு மீட்டர் மட்டுமே மண் அள்ளவேண்டும் என்ற விதியை மீறி ராட்சத இயந்திரங்களை கொண்டு இரண்டு மீட்டருக்கும் மேல் பல இடங்களில் மண் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வண்டல் மட்டுமின்றி பாறைகள் தெரியும் அளவு உள்ள அனைத்து மண்ணும் எடுக்கப்பட்டுள்ளது.

‘குளம் குட்டை பாதுகாப்பு அமைப்பினரின்’ கூற்றுப்படி ஒரு வருடத்தில் சுமார் 2 லட்சம் டிப்பர் லோடு அளவிற்கு மண் சுரண்டப்படும் என்று தெரிகிறது.

Flouted Rules of Excavation

இதற்கிடையில் 09 ஜூலை 2014 வியாழக்கிழமை அன்று குன்னத்தூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் மனு பெரும் நிகழ்ச்சியில் குளத்தில் மண் எடுப்பதை தடுக்கும்படி கோரிக்கை மனுகோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் அவர்களிடம் அளிக்கப்பட்டது.

Collector Receiving Petitions

இதையும் முன்கூட்டியே தெரிந்துகொண்ட ஒப்பந்ததாரர் காவல்துறை மூலம் மிரட்டல் விடுத்ததும்நடந்தேறியது. குளம் குட்டைகள் பாதுகாப்பு அமைப்பை முன்னின்று நடத்துபவர்களின் இல்லத்திற்கு முந்தைய இரவு சென்ற போலீசார் அவர்களை விசாரணைக்காக எஸ்.பி. அழைத்ததாக கூறியுள்ளனர். அதற்கு குழுவினர் தாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பின்பே எஸ்.பியை சந்திக்க இயலும் என்று கூறியதும் திரும்பிச்சென்ற போலீசார் பின்பு தொலைபேசியின் மூலம் அவர்கள் வரத்தேவையில்லை என கூறியதாகவும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Protest Bill

மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்க வந்திருந்த குளம் குட்டைகள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் பேசிய போது காட்டம்பட்டி குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் ஜீவாதாரம் ஆகும். இதனை சேதப்படுதுவதால் விபிரீத விளைவுகள் ஏற்படும் என்று கீழ்க்கண்ட விளைவுகளை பற்றி கூறினர்.

  1. இந்த குளத்தில் பாறைகள் தெரியும் அளவு மண் அள்ளினால் குளத்தின் நீர்பிடிப்பு தன்மை பாதிக்கப்படும்.
  2. இக்குளத்தில் உள்ள மண் அனைத்தும் அள்ளப்பட்டு பாறைகள் தெரிவதால் நீரை உறிஞ்சி நிலத்தடி நீரூற்றுக்கு அனுப்பும் தன்மையை குளம் இழந்துவிடும். இதனால் ஏற்கனவே 1500 அடிக்கும் கீழே சென்றுவிட்ட இந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் மேலும் பாதிக்கப்பட்டு இப்பகுதியே பாலைவனமாகிவிடும்.
  3. இங்குள்ள குளத்து மண் முற்றிலும் சுரண்டப்படுவதால் செடிகளும் மரங்களும் அழிக்கப்பட்டு கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்படும்.
  4. இயற்கை சூழல் பாதிக்கபடுவதால் இந்த குளத்தில் வாழ்ந்துவரும் பறவையினங்கள் அழிந்து சூழல்சமன்பாடும் பாதிக்கப்படும் என்றும் கூறினர்.

அரசு / பொதுப்பணித்துறையின் நோக்கம் குளத்தை தூர்வாருவதாகவோ, குளத்தின் ஆழத்தை அதிகப்படுத்துவதாகவோ இருந்தால் உள்ளூர் விவசாயிகளே வண்டல் மண்ணை எடுப்பதற்கு அனுமதிக்கலாமே…! அதற்கு விவசாயிகளும் தயாராகவே உள்ளனர்.

குளத்தின் நன்மை கருதி செயல்கள் செய்வதானால் முதலாவதாக செய்ய வேண்டியது கடந்த 30 ஆண்டுகளாக நிரம்பாத இந்த குளத்தின் நீர்வரத்து வழிகளை தூர்வாரி மழை நீர் குளத்தை அடைய வழி செய்வதே ஆகும்.

ஆனால் அதற்கான எந்த முயற்சிகளையும் எடுக்காமல், அரசின் செல்வாக்கு பெற்ற சிலரின் பணத்தாசைக்காக குளத்து மண் எனும்  இயற்கை வளத்தை பலி கொடுக்க அரசு முனைந்துவிட்டதையே இது காட்டுகிறது என்பதே ‘குளம் குட்டை பாதுகாப்பு அமைப்பினரின்’ வாதம்.

பிறகு கேள்விப்பட்ட செய்தியோ மேலும் பேரதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது. இந்த ‘குளம் சுரண்டும் திட்டம்’ தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தபடுகிறதாம்.

நீண்ட கால திட்டம் என்ற வழக்கே இப்பொழுது இல்லாமல், குறுகிய கால லாபம் மட்டுமே கொள்கையாக கொண்டு பல்லாயிரம் ஆண்டுகள் பயன் தரும் இயற்கை வளங்கள் என்னும் பொன் வாத்துக்களை வயிறு கிழித்து குருதி குடிக்கும் நிகழ்வுகளை நமது தலைமுறை நாள்தோறும் தவறாமல் கண்டுவருகிறது.

கண்முன்னே நாம் காணும் இந்த கொள்ளையை தடுக்க நமக்கு இப்பொழுது தேவை பலநூறு பேர்கள் மட்டும் சேர்ந்து போராடும் சிறு போராட்டமல்ல… சுதந்திர தாகத்துடன் போரிட்ட, இரண்டு தலைமுறைகளுக்கு முன் இருந்த நம் நாட்டவரின் உத்வேகத்துடன் கூடிய, மாநிலம் தழுவிய ஒரு மாபெரும் இயக்கம்.

நிலக்கரி, இயற்கை வாயு, கெயில் குழாய், குளங்கள் பாதுகாப்பு, வனங்கள் ஆக்கிரமிப்பு என்ற அடுத்தடுத்த சுரண்டல்களை தடுக்க தனித்தனியே சிறு எதிர்ப்புகள் என்றில்லாமல், தமிழகத்தில் உள்ள அனைவருக்குமான சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்த ஒரு விழிப்புணர்வு தேவை.

இந்த அராஜகங்களை எதிர்த்து போராட வேண்டும் என்று நம் அனைவருக்குள்ளும் ஒரு உறுதி வேண்டும்.

****

நமது வருங்காலத்தை நினைத்தால் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா. சபையில் உரையாற்றிய சிறுமி சுசுகி செவெர்ன் கூறியது நினைவிற்கு வருகிறது:

 

எனக்கு முந்தைய தலைமுறையினரே ! பெற்றோர்களே !

நாங்கள் அழும் போதும், கலங்கும் போதும்…

கவலைபடாதே அனைத்தும் நன்றாகிவிடும் என்றீர்களே !

 

நீங்கள் உண்மையை தான் கூறுகிறீர்களா ?

உங்கள் மகள் கேட்கிறேன்…

எங்களுக்கு வாழ்வதற்கு நன்றான உலகத்தை,

நீங்கள் வாழ்ந்ததை விட சிறப்பான உலகத்தை,

நீங்கள் எங்களுக்கு விட்டுசெல்வீர்களா ? அது உங்களால் முடியுமா ?

 

காட்டம்பட்டி குளமும் நானும்:

பறிபோகும் இந்த சொர்க்கத்தை பார்க்கும் போதெல்லாம் பல வருடங்களாக பறவைகளை தேடி இந்த குளத்தை சுற்றி வந்ததும், முப்பதுக்கும் மேற்பட்ட பறவையினங்களை இங்கு நான் கண்டதும், அவைகளின் கீச்சு குரல்களில் லயித்து பல மணித்துளிகளை, நாட்களை, ஆண்டுகளை கழித்ததும், மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்துகிறது….!

இங்கு சுற்றிலும் உள்ள பாழடைந்த கிணறுகளையும், வற்றிப்போன ஆழ்குழாய் கிணறுகளையும், வாடி நிற்கும் பயிர்களையும், வறட்சி தாக்கிய நிலங்களையும்  பார்க்கும்போதெல்லாம், கபடமின்றி பழகும் இந்த மக்களை சுரண்ட கிளம்பியுள்ள பணத்தாசை பிடித்தாட்டும் சுயநல சக்திகளை தோற்கடிக்கும் உத்வேகம் பிறக்கிறது…!

நூற்றாண்டு காலமாய் பாடுபட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் முடிவுகளை எப்படித்தான் இந்த அரசு எடுக்கிறதோ !

எங்கோ உள்ள அதிகாரிகளை குறை சொல்லும் முன் இங்கேயே வாழ்ந்து இங்குள்ள நிலைகளை நன்கறிந்தும், நம்பி வாக்களித்த மக்களை காசுக்காக வஞ்சிக்கும் உள்ளூர் ‘தலைவர்’களை நினைத்தால் இதயத்தில் குருதி தான் வடிகிறது.

இவைகளை வேரறுக்க ஒரு வெறியும் பிறக்கிறது…

இவன்

செயக்குமார் கி.

16 ஜூலை 2014

Advertisements

About jaikris75

Teacher by profession. Nature, Photography, and Birding are my passion.
This entry was posted in Coimbatore and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to பணம் காய்க்கும் குளங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s